உலகின் தலைசிறந்த கணக்கு ஆய்வாளர்களே (pricewaterhousecoopers) ஏமாற்றப்பட்ட கதை

உலகின் அதி சிறந்த ஆடிட்டிங் /அக்கௌண்டிங் நிறுவனம் என்றால் (pricewaterhousecoopers) என்ற பேர் முதலிலேயே வந்துவிடும் . நுற்றுக்கு அதிகமான நாடுகளில் கிளை பரப்பி வியாபித்து நிற்கும் தலை சிறந்த நிறுவனம். இந்த நிறுவனதாயே ஒரு இந்திய கம்பனி ஏமாற்றி இருக்குது என்றால் சற்றே வியந்து பார்க்கவேண்டிய விடயம் தான். இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றும் வரை இந்த நிறுவனம் என்ன செய்து கொண்டு இருந்தது. மிகவும் திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட அந்த கதை வருமாறு.

இந்த பதிவின் பின்வரும் பகுதி ஆர். முத்துக்குமார் eன்பவரது பதிவில் இருந்து எடுக்கப்பட்டது. (http://india360degree.blogspot.com/2009/01/blog-post_10.html)

ஏப்ரல் 2007 முதல் மார்ச் 2008 வரையிலான நிதியாண்டில் சத்யம் நிறுவனத்தின் மொத்த வருமானம் 8,473 கோடி ரூபாய். அதில், லாபம் என்று பார்த்தால் வரிகட்டியது போக 1687 கோடி ரூபாய். இப்படி கடந்த நான்கு நிதி ஆண்டுகளில் மட்டும் சத்யத்துக்குக் கிடைத்த லாபத்தின் மொத்த மதிப்பு 5,360 கோடி. இதுதான் கடந்த நிதியாண்டு முடிவில் சத்யம் நிறுவனம் சமர்ப்பித்த கணக்கு.ஆனால் திடீரென இப்போது எங்கள் கையில் அவ்வளவு பணம் இல்லை. முக்கியமாக, நாங்கள் காண்பித்த எண்ணிக்கையில் ஐயாயிரம் கோடி ரூபாய் குறைகிறது, கைவசம் இருப்பது வெறும் 320 கோடி மட்டுதான் என்று அதிர்ச்சி குண்டுகளை வீசியிருக்கிறார் ராமலிங்க ராஜு.

அதிர்ச்சி. குழப்பம். குளறுபடி. எங்கோ தவறு நடந்துள்ளது. தோண்டிப் பார்த்தால் பல சங்கதிகள் புதைந்து கிடப்பது அம்பலமானது.உண்மையில் மற்ற நான்கு மென்பொருள் நிறுவனங்களைப் போல சத்யம் நிறுவனம் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை. குறைவான லாபத்தையே ஒவ்வொரு ஆண்டும் ஈட்டி வந்துள்ளது. ஆனால் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை அதிக வருமானம் ஈட்டும் நிறுவனம்தான் பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்துக்குத்தான் அதிகப் பங்கு மதிப்பு கிடைக்கும்.

கொஞ்சம் புரியும்படி பார்க்கலாமா? ராமசாமி நிறுவனத்தின் ஆண்டு வருமானம் இருபது கோடி என்று வைத்துக்கொள்வோம். அவர்களுடைய லாபம் இரண்டு கோடி. ஆனால் மாடசாமி நிறுவனத்தின் வருமானம் ஐந்து கோடி. லாபம் இரண்டு கோடி. இரண்டுமே ஒரே அளவு லாபம் சம்பாதித்தாலும், உண்மையில் எது சிறப்பான நிறுவனம்? குறைவான வருமானத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனம்தானே. ஆனால் பங்குச் சந்தையைப் பொறுத்தவரை ராமசாமி நிறுவனத்துக்குதான் அதிக மதிப்பு. அதன் பங்குமதிப்புதான் அதிகம். காரணம், அவர்களுடைய வருமானம்தான் அதிகம். ஏன் இப்படி என்றால், கொஞ்சம் நிர்வாகம் கவனமாக நடந்துகொண்டால், செலவை சற்றே கட்டுப்படுத்தி, லாபத்தை அதிகரித்துவிடலாம் என்பது நம்பிக்கை.மேலும் பங்குச்சந்தையில், ஒரே தொழிலில் இருக்கும் நான்கைந்து நிறுவனங்களை முதலீட்டாளர்கள் எப்போதும் ஒப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள்.டி.சி.எஸ், இன்ஃபோசிஸ் எல்லாம் இத்தனை சதவிகிதம் லாபம் என்கிறதே, நீங்கள் மட்டும் ஏன் வருமானமும் இல்லை, லாபமும் இல்லை என்கிறீர்கள் என்று சத்யத்தைக் கேள்விகள் கேட்பார்கள். பதில் சொல்ல முடியவில்லை என்றால், சத்யத்தின் பங்கு விலைகள் அதலபாதாளத்தில் படுத்துவிடும்.இதுதான் சத்யம் நிறுவனத்தலைவர் ராமலிங்க ராஜுவை யோசிக்கவைத்தது.

என்ன மாய மந்திர வித்தைகள் செய்தால் சத்யத்தின் பங்கு மதிப்பை உயர்த்தமுடியும் என்று யோசிக்கத் தொடங்கினார். தொழில்நுட்ப மூளை அல்லவா, நுட்பமாகவே சிந்திக்கத் தொடங்கியது. ஒத்தாசைக்கு நிதித்துறையில் பழம் தின்று கொட்டை போட்ட சில முக்கியஸ்தர்கள் வந்தனர்.உட்கார்ந்து பேசியதில் அழகான திட்டம் இறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தத் திட்டம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.

சத்யம் நிறுவனத்துக்கு வெளியில் இருந்து வரவேண்டிய தொகையை உயர்த்திக் கணக்கு காட்ட வேண்டும். இது முதல்படி. அடுத்தது. சத்யம் நிறுவனத்தில் இருந்து வெளிநபருக்குச் செல்லவேண்டிய தொகையைக் குறைத்து கணக்கு காட்ட வேண்டும். இது இரண்டாவது படி. இறுதியாக, நிறுவனத்தின் கையில் இருக்கும் ரொக்கம் அல்லது சொத்து மதிப்பு உண்மையைவிட அதிகம் என்பதுபோல கணக்குகளைத் தயார் செய்வது.

வெளியில் இருந்து வரவேண்டிய பணத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக சத்யம் தேர்வு செய்த உத்தி, போலி இன்வாய்ஸ்களைத் தயாரிப்பது. ஊர், பேர் தெரியாத நபர்களுடைய பெயரில் இன்வாய்ஸ்களைத் தயாரித்து கணக்கில் காட்டினார்கள் துணிச்சலாக. இதனால் வருமானம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது, போலியாக. ஆனால் இது சத்யம் நிர்வாகிகளுக்கும் கணக்கு வழக்குகளைக் கண்காணிப்பவர்களுக்கு மட்டும்தானே தெரியும்.சத்யம் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் நிறுவனத்தின் பெயர் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ். அவர்களுடைய வாயை எப்படி அடைத்தார்கள் அல்லது அவர்களுடைய கண்ணில் எப்படி மண்ணைத் தூவினார்கள் என்பது இன்னும் வெளியே வராத சங்கதி. அல்லது அவர்களுமே இதற்கு உடந்தையா என்பது மற்றொரு திகில் விஷயம்.பெயரளவில் வருமானம் உச்சத்துக்கு சென்று கொண்டிருந்ததால் சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் உயரத்திலேயே இருந்தது. ராமலிங்க ராஜூ எதிர்பார்த்ததும் அதுவே. மெல்ல மெல்ல சத்யம் நிறுவனத்தின் பங்குகளை விற்கத் தொடங்கினார். நிறுவனம் நல்ல நிலையில் இருப்பதாக நிதிநிலை அறிக்கைகள் சொன்னதால் ஏராளமான முதலீட்டாளர்கள் சத்யம் பங்குகளை வாங்கிக் குவித்தனர். இறுதியில் ராஜு மற்றும் குடும்பத்தினர் கையில் வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே இருந்தது. அதையும்கூட வங்கியில் அடமானம் வைத்து கூடுதலாகக் கடன் வாங்கினார் ராஜு.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு மேல் தாங்காது அல்லவா? சத்யம் நிறுவன கணக்கு ஏடுகளில் லாபத்தொகை ஏறிக்கொண்டே வந்தது. 5360 கோடி என்ற அளவை எட்டிய பிறகுதான் நிலைமை எல்லை கடந்துகொண்டிருக்கிறது என்பது ராமலிங்க ராஜுவுக்குப் புரிந்தது. ஐயாயிரம் கோடி உதைக்கிறதே என்று உதறல் எடுக்கத் தொடங்கியதும் அதன்பிறகுதான். மிகப்பெரிய குளறுபடியைச் செய்திருக்கிறோம். சிக்கினால் சின்னாபின்னமாகிவிடுவோம் என்ற நிலை. தண்டனை இல்லாமல் தப்பிக்க இன்னொரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார் ராஜூ. விநாச காலே விபரீத புத்தி.இதற்கிடையில், அவருடைய இரண்டு மகன்களும் சேர்ந்து மேதாஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Maytas Infrastructure) மற்றும் மேதாஸ் ப்ராபர்டீஸ் (Maytas Properties) என்ற இரண்டு நிறுவனங்களை உருவாக்கியிருந்தனர். நிறுவனத்தின் பெயரான Maytasஐ திருப்பிப் போட்டால் Satyam என்று வருகிறது. சத்யம் நிறுவனத்தை அப்படியே புரட்டிப் போடும் முயற்சி என்பதற்கு இது ஒரு சமிக்ஞை. யாருக்கும் அது அப்போது புரியவில்லை.திட்டம் இதுதான். சத்யம் நிறுவனக் கணக்கு ஏடுகளில் இடித்துக் கொண்டிருக்கும் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு அந்த மேதாஸ் நிறுவனங்களை வாங்கியது போல கணக்கு காட்டிவிட்டால் தீர்ந்தது பிரச்னை. அந்த நிறுவனங்களின் அதிபர்கள் தன்னுடைய மகன்களாக இருப்பதால் டீல் முடிவதில் பிரச்னை இல்லை. பேப்பர் அளவில் நிறுவனத்தைக் கையகப்படுத்திவிடலாம், பைசா செலவில்லாமல். அதே நேரம், இல்லாத காசை இருப்பதுபோலக் காட்டி, கொடுப்பதுபோலக் கொடுத்து, தன் பேரில் உள்ள ஏமாற்றல் குற்றச்சாட்டு வெளியாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இங்குதான் விவகாரம் வேறு திசையில் திரும்பியது.யார் அந்த மேதாஸ் நிறுவனம்? அவர்கள் இருக்கும் துறை என்ன? மென்பொருள் துறையில் இருக்கும் நாம் ஏன் போய் கட்டுமான நிறுவனத்தை வாங்கவேண்டும்.அப்படியே செய்வதென்றாலும், எதற்காக அந்த நிறுவனத்தை வாங்கவேண்டும்? அதுவும் ஏன் ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு? அந்த அளவுக்கு தகுதியான நிறுவனமா அது? தனது குடும்பமே பங்குதாரராக இருக்கும் இரு நிறுவனங்களுக்கு இடையே இப்படி கொடுக்கல் வாங்கல் செய்வதில் வெளிப்படையாக நடந்துகொள்ளவில்லையே? இது ஏன்? கேள்வி மேல் கேள்வி கேட்டனர் சத்யம் நிறுவனப் பங்குகளின் முதலீடு செய்தவர்கள். பதில் சொல்ல முடியாமல் திணறினார் ராமலிங்க ராஜு. எதிர்ப்பு வலுப்படவே அந்தத் திட்டத்தை அடுத்த நாளே கைவிடுவதாக அறிக்கை விட்டார் ராஜு.வால் போய் கத்தி வந்த கதையாக இப்போது அடுத்த பிரச்னை எழுந்து நின்று பயமுறுத்தியது. நிறுவனத்தில் வரும் லாபத்தில் கணிசமான தொகையை முதலீட்டாளர்களுக்கு டிவிடண்ட் என்ற பெயரில் தருவது நிறுவனங்களின் வழக்கம். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகாலக் கணக்கை எடுத்துப் பார்த்ததில் கடந்த அதில் மூன்று ஆண்டுகளில் டிவிடண்ட் என்பதையே முதலீட்டாளர்களுக்குத் தரவில்லை சத்யம். ஐயாயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு நிறுவனத்தை வாங்கும் அளவுக்கு சத்யம் வலுவாக இருக்கும்போது ஏன் டிவிடண்ட் தரக்கூடாது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.தலையே சுற்றுவது போல இருந்தது ராமலிங்க ராஜுவுக்கு. பணம் இருந்தால்தானே ஐயா, தருவதற்கு? போதாக்குறைக்கு சத்யம் நிறுவனத்தில் இயக்குனர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்த சிலர் தமது பதவிகளை வரிசையாக ராஜினாமா செய்தனர்.அதே நேரம் பார்த்து உலக வங்கி, சத்யம் நிறுவனத்துக்குக் கொடுத்திருந்த சேவை ஒப்பந்தங்கள் சிலவற்றை விலக்கிக்கொண்டு, சத்யம் நிறுவனத்தை எட்டு ஆண்டுகளுக்குத் தடை செய்துள்ளது என்ற தவல் கசிந்தது. ராஜுவும் குடும்பத்தினரும் கையில் வைத்திருக்கும் பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளனர் என்றும், இப்போது பங்கு விலை இறங்கிக்கொண்டே வருவதால் கடன் கொடுத்த வங்கிகள் அந்தப் பங்குகளை பொதுச்சந்தையில் விற்று பணம் செய்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.இனியும் உண்மையை மூடி மறைத்தால் உயிரோடு விடமாட்டார்கள் முதலீட்டாளர்கள் என்பதால் பகிரங்கமாகக் கடிதம் எழுதிவிட்டு, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார் ராஜூ.அதிர்வுகள் பலமாகக் கேட்கத் தொடங்கியுள்ளன. சத்யம் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, தேசியப் பங்குச்சந்தையிலும் மும்பை பங்குச்சந்தையிலும் ஒரே நாளில் 160 சொச்சம் ரூபாயிலிருந்து 75 சதவீதம் அதிரடியாகக் குறைந்து சுமார் 40 ரூபாய்க்கு வந்துள்ளது. நியூ யார்க் பங்குச்சந்தையில், இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வதை நேற்று தடை செய்துள்ளனர். இந்தப் பங்கின் விலை மேலும் இறங்கும் அபாயம் இருக்கிறது. இதனால் அந்தப் பங்குகளில் முதலீடு செய்தவர்களின் நிலை அதளபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது.தவிரவும், நிறுவனம் பலமாகச் சேதமடைந்துள்ளதால் அதில் வேலை பார்த்துவரும் ஐம்பத்து மூன்றாயிரம் பணியாளர்களுக்கும் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடி உலகத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s